
தேர்தல் பிரசாரங்கள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தோல்வியின்
விளிம்புக்கு வந்துள்ள அரசாங்கமும் அதன் பங்காளிகளும் எப்படியாவது
வெற்றிபெற வேண்டும் என்ற வெறித்தனத்தில் வன்முறையின் உச்சகட்டத்தை
கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
இதன் ஒரு அங்கமாகத் தான் இது வரை எந்தப் பிரச்சினையிலும் சிக்காமல் மிக
அமைதியாக தேர்தல் பிரசாரங்களில் ஈடபட்டு வந்த வடமேல் மாகாண சபையின் தேசிய
ஐக்கிய முன்னணி வேட்பாளர்கள் மீதும் அரச காடையர்கள் வெறித்தனம் கொண்டு
தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நுரைச்சோலை பிரதேசத்தில் அமைதியான தேர்தல் பிரசாரத்தில் ஈடபட்ட தேசிய
ஐக்கிய முன்னணியின் புத்தளம் மாவட்ட பிரதான வேட்பாளர் பைரூஸ் தாக்கப்பட்டமை
தொடர்பாக தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய
தேசியக் கட்சி பட்டியலில் போட்டியிடும் வேட்பாளருமான அஸாத் சாலி
வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவத்துள்ளதாவது,கற்பிட்டி பிரதேசத்தில் ஜனநாயக
ரீதியில் ஒரு வேட்பாளருக்கு இருக்கின்ற அடிப்படை உரிமையான தேர்தல் பிரசார
பணிகளில் ஈடுபட்டிருந்த எமது கட்சியின் பிரதான வேட்பாளர் மீதும் அவரது
ஆதரவாளர்கள் மீதும் அரச ஆதரவு கட்சியைச் சேர்ந்த கற்பிட்டி பிரதேச சபை
தலைவர் மின்ஹாஜ் மற்றும் கடையாமோட்டை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
முக்கியஸ்தர் றியாஸ் ஆகியோர் தலைமையிலான காடையர் குழுவினர் மிகவும்
சூட்சுமமான முறையில் சுற்றிவளைத்து மூர்க்கத்தனமாக தாக்குதல்
நடத்தியுள்ளனர். இது தேர்தல் சட்டங்களை மட்டுமன்றி நாட்டின் சாதாரண
சட்டங்களைக் கூட அப்பட்டமாக மீறியுள்ள ஒரு அடாவடித்தனமாகும். இந்த
காடைத்தனத்தை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மக்களை ஏமாற்றி இவர்கள் நடத்தி வந்த அரசியல் நாடகம் தற்போது அதன் கடைசி
அத்தியாயத்தை எட்டியுள்ளது. 21ம் திகதி மக்கள் அளிக்கவுள்ள தீர்ப்போடு
இவர்களின் முகத்திரைகளும் கிழிக்கப்படவுள்ளன. இதை நன்கு உணர்ந்துள்ள
இவர்கள் தற்போது தோல்வியை சந்திக்க துணிவற்று வெறித்தனத்தின் உச்ச
கட்டத்துக்கு வந்துள்ளனர். இவர்களின் இந்த அடாவடித்தனத்துக்கு மக்கள்
நிச்சயம் சரியான தீர்ப்பு வழங்குவர் என்ற உறுதியான நம்பிக்கை எமக்குள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடமும் தேர்தல் ஆணையாளரிடமும், மற்றும் இதர
சுயாதீன உள்நாட்டு வெளிநாட்டு தேர்தல் கண்கானிப்பு பிரிவினரிடமும் நாம்
முறைப்பாடு செய்துள்ளோம். இது பற்றி விசாரண நடத்தி உரியவர்களை சட்டத்தின்
முன் நிறுத்துமாறு நாம் தொடர்ந்து அழுத்தங்களைப் பிரயோகிக்க உள்ளோம்.
தேர்தலுக்கு நியாயமாக முகம் கொடுக்க தைரியமற்ற இத்தகைய கோழைகளின்
தாக்குதலைக் கண்டு அஞ்சி ஒதுங்கும் கூட்டமல்ல தேசிய ஐக்கிய முன்னணி. எமக்கு
மக்களின் பூரண ஆதரவு உண்டு. ஏனெனில் நாம் களமிறங்கியிருப்பது மக்களின்
உரிமைகளைப் பாதுகாக்க. இது வாக்காளப் பெருமக்களுக்கு நன்கு தெரியும் எனவே
மக்களின் ஆதரவு உள்ளவரை யாரும் எம்மை அசைக்க முடியாது.இந்த சமூகத்தில் ஒரு
மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வெற்றிக் கம்பத்தை அடையும் வரை எமது பயணம்
தொடரும்.
தலைவர் தேசிய ஐக்கிய முன்னணி
No comments:
Post a Comment