
டெல்லி மாணவியைக்
கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய கும்பலுக்குத் தூக்குத் தண்டனை
விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தீர்ப்பு தேசத்துக்கே ஒரு மனநிம்மதியை
ஏற்படுத்தியுள்ளது!
இந்தியாவையே கொந்தளிக்க
வைத்த அந்தச் சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி நடந்தது. ஆறு
கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி 13
தினங்களுக்குப் பின்னர் மரணமும் அடைந்தார். விநோதமான திருப்பங்கள் கொண்டது
இந்த வழக்கு. முக்கியக் குற்ற வாளியான ஓட்டுநர் ராம்சிங், தனக்குத்
தண்டனை உறுதி என அறிந்து நீதிமன்றக் காவலில் இருக்கும்போதே கடந்த மார்ச்
மாதம் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். மற்ற ஐந்து பேரில் ஒருவர்
மைனர். இவரைப் பற்றிய வழக்கு தனியாகப் பிரிக்கப்பட்டு சிறார்களுக்கான
நீதிமன்றத்தில் நடந்தது. அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை
விதிக்கப்பட்டது. மீதமுள்ள நான்கு பேருக்கு இப்போது, சிறப்பு நீதிமன்ற
நீதிபதி யோகேஷ் கன்னா தூக்குத் தண்டனை விதித்தார். 'தூக்கில் போடுங்கள்’
என்றுதான் நாடு முழுவதும் குரல்கள் ஒலித்தன.
உ.பி.யைச் சேர்ந்த மாணவி தன்னுடைய ஆண்
நண்பருடன் டெல்லியில் சாக்கேத் என்ற பகுதியில் உள்ள செல்க்ட் சிட்டி வாக்
மால் என்ற ஷாப்பிங் மாலில் உள்ள திரையரங்கில் சினிமா பார்த்துவிட்டு வீடு
திரும்பிய நேரத்தில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்தது. இதுகுறித்து புகார்
வந்ததும் இரவோடு இரவாக போலீஸார் விசாரித்தனர். சி.சி.டி.வி. கேமராவில்
பதிவான வீடியோ காட்சிதான் முக்கியத் தடயம். இந்த சி.சி.டி.வி மூலம்
பஸ்ஸின் அடையாளத்தைக் கண்டறிந்து ஒவ்வொருவராகக் கைதுசெய்தனர். இந்த ஆறு
பேருக்கும் டெல்லி பூர்வீகம் கிடையாது. பீகார், ராஜஸ்தான், ஹரியானா, உ.பி.
போன்ற மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வந்தவர்கள்.
ஜெயிலில் இருக்கும் பவன்
குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா, அக்ஷய் தாகூர் சிங் ஆகிய நான்கு
பேரையும் சாகும்வரை தூக்குக் கயிற்றால் இறுக்கவேண்டும் என்று எழுதப்பட்ட
தீர்ப்பு சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்டது.
''பெண்களுக்கு எதிரான
குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் கண்ணை மூடிக்கொண்டு இருக்கமுடியாது.
அதுவும் இந்தச் சம்பவம் பாலியல் வன்கொடுமைகளிலேயே உச்சக்கட்டம். இந்தக்
குற்றவாளிகளின் காட்டுமிராண்டித்தனம் எந்த அளவுக்கு இருந்தது என்றால்
அவர்கள் தங்கள் கைகளாலும் இரும்புத் தடியாலும் தாக்கி அந்தப் பெண்ணின்
உள்உறுப்பை வெளியே இழுத்து அதைச் சீர்படுத்த முடியாதபடி செய்து இருந்தனர்.
சமூகத்தில் இப்படி நடக்கும் சம்பவங்களால் பெண்களிடம் பெரிய அச்சம்
ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டவே இப்படிப்பட்ட தீர்ப்பை
வழங்குகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார் நீதிபதி.
குற்றம்சாட்டப்பட்ட அக்ஷை
தாகூர் சிங், வினய் சர்மா ஆகியோரின் வழக்கறிஞரான ஏ.பி.சிங், நீதிபதி
தீர்ப்பைப் படிக்கும் போதும் சரி, நீதிமன்றத்துக்கு வெளியேயும்
சரி, தீர்ப்பையும் சமூகத்தையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர் ஏ.பி.சிங், ''அரசியல் நோக்கத்தோடு தீர்ப்பு
கொடுக்கப்பட்டுள்ளது'' என்றார். நீதிபதி பதில் கூறவில்லை. வெளியே வந்த
சிங், ''உண்மை வெல்லவில்லை. மீடியாக்களின் செய்தியும் பொதுமக்களின்
சென்டிமென்ட்டும் சட்டத்தை மீறியுள்ளது. இந்தத் தூக்குத் தண்டனைக்குப்
பின்னர் ஒரு கற்பழிப்பு நடக்காது என்றால் நான் இதை ஏற்றுக்கொள்கிறேன்''
என்றார். குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் இப்படி கூறிய விவகாரம்
இப்போது பார் கவுன்சில் வரை சென்றுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின்
சார்பில் கட்டணம் வாங்காமல் ஆஜரானார் வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன்.
குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனைப் பெற்றுக்கொடுத்த இவர், தமிழகத்தைச்
சேர்ந்தவர். நீலகிரியைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் கே.வி.கிருஷ்ணன்
என்பவரின் மகன். அவரிடம் பேசினோம்.
''கடந்த ஒன்பது மாதங்களாக
நாங்கள் ஓய்வில்லாமல் பணியாற்றினோம். இறுதியில் நல்லதீர்ப்பு
கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி. நான் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் மத்திய
அரசுக்கு ஆஜராகி இருக்கிறேன். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்
தீர்ப்பிலிருந்து தப்புவதற்கு எத்தனையோ முறைகளைக் கையாண்டனர். அதையெல்லாம்
முறியடித்தோம்'' என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
''குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த ஆறு பேரும் கற்பழிப்பில் ஈடுபட்டார்களா?''
''பஸ்ஸை ஓட்டிச்
சென்றவரும் இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டார். அவர்கள் பஸ்ஸுக்குள்
சுற்றிச்சுற்றி வந்து இந்தக் கொடூரத்தைச் செய்துள்ளனர். ஒரு ரவுண் டில்
ஒருவர் ஓட்டுநர், மற்றொரு ரவுண்டுக்கு வேறொருவர் ஓட்டுநராக இருந்துள்ளார்.
இதனால் எல்லோருக்குமே குற்றத் தொடர்பு உண்டு''
'' இந்த வழக்கு விசாரணை எதிர்காலத்துக்கு ஓர் உதாரணமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறதே?''
''போலீஸார் தங்கள்
விசாரணையில் மரபணுச் சோதனைகளை நடத்தி குற்றவாளிகள் குறித்த உண்மையைக்
கண்டறிந்தனர். கற்பழிக்கப்பட்ட பெண்ணின் உடலில் குற்றவாளிகளின் மரபணு
சாட்சியங்கள் கிடைத்தன. சில குற்றவாளிகளிடம் பெண்ணின் மரபணு தடயங்கள்
இருந்தன. சம்பவம் நடந்த இடம், அவர்கள் பயன்படுத்திய இரும்புத் தடியிலும்
இருந்தது. இப்படி எங்கெங்கெல்லாம் எடுக்க முடியுமோ அங்கெல்லாம் சென்று
போலீஸார் ஆதாரங்களைச் சேகரித்தனர். அது இந்தக் குற்றங்களுக்கு முக்கியச்
சாட்சியமாக இருந்தது. அது, பாதிப்பட்டவரோடும் குற்ற வாளிகளோடும்
பொருந்தியது. டி.என்.ஏ. சோத னைகளில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரது
மரபணுக்களும் கிடைத்தன. கற்பழிக்கப்பட்ட பெண் என்றாலும் சரி குற்றவாளிகள்
என்றாலும் சரி அவர்கள் உடலை 20 முறை கழுவினாலும் இந்த டி.என்.ஏ. மரபணு
செல் அழியாது''
''அந்தப் பெண்ணின் பிறப்பு உறுப்பில் இரும்புத் தடியைச் செலுத்தும் அளவுக்கு வெறித்தனம் ஏற்பட குடிபோதைதான் காரணமா?''
''அது மட்டுமல்ல, குற்றவாளிகளின் உளவியல் பிரச்னையும் காரணம்'' என்று சொன்னார்.
'இந்த தீர்ப்புக்குப்
பிறகு நாங்கள் நிம்மதியடைந்துள்ளோம்’ என்று பாதிக்கப்பட்ட பெண்ணின்
பெற்றோர் கூறினர். பெண்ணைப் பெற்ற பலரும் நிச்சயம் நிம்மதி
அடைந்திருப்பார்கள்.
Topics : டெல்லி பாலியல் பலாத்காரம் குற்றவாளிகள் தூக்குதண்டனை மரபணு சோதனை வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன் நீதிபதி தீர்ப்பு
No comments:
Post a Comment