Thursday, November 7, 2013

மார்பக புற்றுநோய் கண்டறிவது எப்படி?






புற்றுநோய், மரபு அணுக்களில் உள்ள நுண்ணுயிர் (DNA) மாற்றங்களினால் உண்டாகிறது. இது உயிரிழப்பை ஏற்படுத்தும் கொடிய நோய்களுள் ஒன்றாக இருக்கிறது. அதிலும் மார்பக புற்று நோய் உலக அளவில் பெண்களை பாதிக்கும் முக்கிய நோயாக உருவெடுத்து இருக்கிறது.

மேற்கத்திய நாடுகளில் காணப்படும் புற்று நோய்களில் மார்பக புற்று நோய் முதலிடத்தையும், நோய்களால் ஏற்படும் இறப்புகளில் இரண்டாம் இடத்தையும் வகிக்கிறது. நமது நாட்டில் இது வரை கர்ப்பப்பை வாய் (Cervix) புற்று நோய் பாதிப்பே முதலிடத்தில் இருந்தது. 

தற்போதைய வாழ்வியல் மாற்றங்களினால் நகர்ப்புறங்களில் மார்பக புற்று நோய் முதலிடத்தை பிடித்து விட்டது. இது மேலும் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மார்பகப் புற்று நோய்க்கான காரணங்கள் பல. அதில் மிக முக்கியமானது மரபணுவில் ( BRCA 1 and BRCA 11) மாற்றங்கள் ஏற்படுவது. 

இந்த மாற்றங்கள் ஏற்படும் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு 10-30 மடங்கு அதிகரிக்கும். அதாவது அவர்களுக்கு 85 சதவீதம் நோய் தாக்குவதற்கான அபாயம் உள்ளது. இந்த நோய்க்கான மற்ற காரணங்களில் முக்கியமானது ஹார்மோன்கள். 

நம் உடலில் அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் சுரப்பது நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. குடும்பத்தில் தாய் அல்லது உடன் பிறந்த சகோதரிக்கு இந்த வியாதி இருந்தால் மற்ற சகோதரிகளுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். 

சிறுவயதில் பூப்படைதல், மாதவிடாய் நாட்பட்டு நிற்பது, குழந்தைப்பேறு இன்மை, 30 வயதிற்கு மேல் முதல் குழந்தை பெறுவது, உடல் பருமன், உணவில் அதிக கொழுப்பு சேர்ப்பது, மது அருந்துதல், உடற்பயிற்சி இன்மை ஆகியவை மார்பகப் புற்றுப் நோய் வருவதற்கான காரணங்களாக இருக்கின்றன. 

ஆகவே இந்நோயின் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, நோயை ஆரம்ப நிலையில் கண்டறியும் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் புற்று நோயை தடுக்க முடியாது. ஆனால் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்தலாம். புற்றுநோயை கண்டறிவதற்கான பரிசோதனைகளில் மிக முக்கியமானது மேமோகிரபி (mammogram). 

5 mm-க்கு மேலான கட்டிகளை இப்பரிசோதனை மூலம் கண்டறிய இயலும். 40 வயதிற்கு மேலான பெண்கள் இந்த பரிசோதனையை வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். மேலும் மாதம் ஒருமுறை மார்பகங்களை தாங்களாகவே சுய பரிசோதனை செய்தும் அறிகுறிகளை தொடக்கத்திலேயே கண்டறியலாம். 

ஆரம்பநிலை பரிசோதனைகளை செய்து கொள்ளாவிட்டாலும் தங்கள் மார்பகத்தில் ஏதாவது மாற்றம் தெரிந்தால் (கட்டிகள், மார்புக் காம்பிலிருந்து ரத்தம் அல்லது நீர் வெளியேறுதல், மார்பகத் தோலில் மாற்றங்கள்) உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்க வேண்டும். 

நோயாளிகள் காலம் கடந்து பரிசோதனைக்கு வரும்போது மருத்துவரிடம் பெரும்பாலும் கூறும் காரணம், கட்டிகள் வலி இல்லாமல் இருப்பது பற்றி தான். ஆனால் வலி இல்லாத கட்டிகளைத்தான் உடனடியாக கவனிக்க வேண்டும். மார்பகத்தில் வரும் கட்டிகள் அனைத்தும் புற்றுநோய் கட்டிகள் அல்ல. 

எனினும் உடனே பரிசோதனை செய்து அறிந்து கொள்வதே சாலச் சிறந்தது. ஆரம்பநிலையில் கண்டறிவதால் நோயை குணப்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் பெண்மைக்கே உரித்தான மார்பகங்களையும் அகற்றாமல் காத்துக் கொள்ளலாம். அதாவது கட்டியின் அளவு 2 cm -க்குள் இருந்தால் கட்டியை அகற்றினால் போதுமானது. 

ஆகையால் நோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதால் உயிரும், உறுப்பும் காப்பாற்றப்படும். மார்பக புற்று நோய்க்கான சிகிச்சை முறைகளாக அறுவை சிகிச்சை, வேதிச் சிகிச்சை (chemotherapy), கதிர்வீச்சு சிகிச்சை (radiotherapy) மற்றும் ஹார்மோன் சிகிச்சைகள் இருக்கின்றன. 

நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நோய் முற்றிய நிலையில் வரும் நோயாளிகளுக்கு நோயின் தாக்கத்தையும், துயரத்தையும் குறைத்து அவர்களை காப்பதே சிகிச்சையின் நோக்கமாகும். புற்றுநோய் ஒரு சாபமல்ல! அதுவும் குணப்படுத்தக்கூடிய ஒரு நோயே!!

No comments:

Post a Comment