இந்திய பணத்தில் 3 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தையும், தங்க நகைகளையும் இவர்கள் கடத்திச் சென்றுள்ளார்கள். இதன் பெறுமதி இலங்கைப் பணத்தில் 6.32 கோடி ரூபாவாகும். இந்த தங்க கடத்தல் கும்பல் கடந்த செப்டெம்பர் மாதம் முதல் அடிக்கடி கொழும்புக்கும் கொச்சினுக்கும், சென்னைக்கும் சென்று திரும்பியவர்கள் என்று கொச்சின் விமான நிலையத்தில் விசாரணைகளை நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் இந்த விசாரணைகளை நடத்திய சுங்க ஆணையாளர் கே.என்.ராகவன் இது தொடர்பில்..
இவர்கள் சர்வதேச தங்கக் கடத்தல் குழுவின் முக்கியஸ்தர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் தங்களுக்கு வலுப்பெற்று இருப்பதனால் அவர்களை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய இருப்பதாக கூறினார்.
இந்த தங்கக் கடத்தல் காரர்களுக்கும் சர்வதேச பயங்கரவாதிகளுக்கும் இடையில் தொடர்புகள் ஏதாவது இருக்கின்றனவா எனவும் இந்திய புலனாய்வுத் துறையாளர்கள் இப்போது தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.
இவ்விதம் தங்கத்தைக் கடத்தியவர்கள் இந்தியாவில் விற்பனை செய்யும் ஒவ்வொரு கிலோ தங்கத்தில் இருந்தும் 3 முதல் 4 இலட்சம் இந்திய ரூபாவை இலாபமாக பெற முடியும் என்றும் அவர் கூறினார்.
தற்போது கைதானவர்களில் பெரும்பாலானோர் கடந்த, இம்மாதத்தில் மாத்திரம் 6 தடவைகள் கட்டுநாயக்க சர்வதேச விமானத்தில் இருந்து கொச்சின் விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார்கள்.
சென்னை விமான நிலையத்தை விட கொச்சின் விமான நிலையத்தில் சோதனைகள் குறைவாக இருப்பதனால் தான் இவர்கள் கொச்சின்விமான நிலையத்திற்கு அதிகமாக செல்கிறார்கள் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த கடத்தல் காரர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து இந்தியப் புலனாய்வுத் துறையினர் தங்கள் வெளிவிவகார அமைச்சின் ஊடாக புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவித்துள்ளனர்.
முதலில் கைது செய்யப்பட்ட 42 பேரில் ஒருவரை புலன் விசாரணை செய்த போது அவரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் பேரில் ஒரு பெண் உட்பட மேலும் 13 பேரை இந்தியப் புலனாய்வுத் துறையினர் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார்கள்.
கடந்த சனிக்கிழமை காலை இவர்கள் அனைவரும் கொச்சின் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட போது 28 பெண்கள் உடம்பு முழுவதும் மோதிரங்கள், காதணிகள், வளையல்கள், தங்கச் சங்கிலிகளை அணிந்து மணப்பெண்களைப் போன்று தோற்றம் அளித்ததனால் சுங்க அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்ததாக அங்குள்ள ஒரு அதிகாரி தெரிவித்தார். சோதனையின் போது இந்த பெண்கள் நகைகளை அணிந்ததுடன் நின்று விடாமல் மறைவிடங்களிலும் தங்கத்தை உடலில் கட்டி வைத்திருந்தார்கள் என்றும் சுங்க அதிகாரிகள் கூறினர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதி அமைச்சர் என்ற முறையில் தனது வரவு செலவுத் திட்டத்தில் தங்கத்தின் விலையைக் குறைத்ததனால் தங்கத்தை இந்தியாவுக்கு கடத்திச் சென்று கொள்ளை இலாபம் சம்பாதிக்க முடியும் என்ற நப்பாசையிலேயே இவர்கள் இந்தக் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment