வாழ்நாள் முழுக்க நமக்காக ஓயாமல் துடித்துக்கொண்டே இருக்கும் நம்
இதயம் நின்று சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு பிறகு இயங்குவோம் என்று
நினைத்தால் மனித வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். ஆனால் அப்படிச்
செய்யாமல் நமக்காக உண்மையாக உழைக்கும் இதயத்தை சிலபல நோய்கள்
சேதப்படுத்துவதால் அவை செயலிழந்துபோகும் அபாயமும் இருக்கிறது. உதாரணமாக
அமெரிக்காவில் மட்டும் சுமார் ஒரு இலட்சம் மக்கள் செயலிழந்த இதயத்துடன்
மாற்று இதயத்துக்காக காத்திருக்கிறார்களாம்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக வருடம் ஒன்றுக்கு வெறும் 2 ஆயிரம் மாற்று
இதயங்களே கிடைக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. இத்தகைய இக்கட்டான சூழலில்
மாற்று இதயத்துக்காகக் காத்திருப்பவர்களின் உயிரைக்காக்க சின்கார்டியா
போன்ற நிறுவனங்கள் தற்காலிக செயற்கை இதயம் அல்லது இதயச் செயற்பாட்டுக்கு
உதவும் திறனுள்ள எந்திரக் குழாய்கள் போன்றவற்றை உருவாக்கியிருக்கின்றன.
நோய்வாய்ப்பட்ட அல்லது பகுதி சேதமடைந்த இதயங்களின் செயல்பாட்டுக்கு
உதவும் தற்காலிக செயற்கை இதயம் மற்றும் எந்திரங்களைப் போலல்லாமல் நீண்டநாள்
பயன்பாட்டுக்கான ஒரு முழுமையான செயற்கை இதயத்தை உருவாக்கி
அசத்தியிருக்கின்றது பாரிசில் உள்ள கார்மட் எனும் நிறுவனம்.
மிக விரைவில் செயலிழந்த இதயம் கொண்ட நோயாளிகளைக்கொண்டு
பரிசோதிக்கப்படவிருக்கும் இந்த புதிய செயற்கை இதயம் சென்சார்கள்,
மென்பொருள் மற்றும் மைக்ரோ எலக்ட்ரோனிக்ஸ் ஆகியவற்றால்
கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இதன் இயக்கத்துக்குத் தேவையான மின்ஆற்றலை
(உடலுக்கு வெளியே) கையில் அணிந்துகொள்ளக்கூடிய பெல்ட் போன்வற்றில்
பொருத்தப்படக்கூடிய லித்தியம் அயான் மின்கலங்கள் (பேட்டரிகள்)
கொடுக்கின்றன.
சுமார் 15 ஆண்டுகால உழைப்பில் உருவாகியுள்ள இந்த செயற்கை இதயத்தை மனித
மருத்துவ ஆய்வுகள் மூலம் பரிசோதிக்க பெல்ஜியம், போலந்து, சவூதி அரேபியா
மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளிலுள்ள இதய அறுவைச் சிகிச்சை மையங்கள்
அனுமதி வழங்கியுள்ளன என்கிறார் கார்மட் நிறுவன இயக்குநர் பேராசிரியர் பையட்
ஜோன்சன். செயற்கை இதயங்கள் உருவாக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல என்றாலும்
கார்மட் நிறுவனத்தின் இந்த செயற்கை இதயமானது வித்தியாசமான
வடிவமைப்பைக்கொண்டது என்கிறார் டியூக் பல்கலைக்கழகத்தின் இதய மாற்று
அறுவைச் சிகிச்சை மையத்தின் இயக்குநரான இணைப் பேராசிரியர் ஜோசப் ரோஜர்ஸ்.
முக்கியமாக இந்த செயற்கை இதயத்தில் இரத்தத்துடன் தொடர்பில்
இருக்கக்கூடிய பகுதியானது மாடுகளின் இதயத்தைச் சுற்றியுள்ள பெரிக்கார்டியன்
பையில் உள்ள தசைகளால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கு
முந்தைய செயற்கை இதயங்களில் இருந்த குறிப்பிட்ட அந்தப் பகுதி
பிளாஸ்டிக்கால் ஆனது என்பதும் அதனால் இரத்தக்கட்டு போன்ற பிரச்சினைகள்
ஏற்படும் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. கார்மட் நிறுவனத்தின் செயற்கை
இதயத்தில் ஒரு சவ்வினால் பிரிக்கப்பட்ட இரண்டு அறைகள் உண்டு. அந்த சவ்வின்
ஒரு பக்கம் (இரத்தத்துடன் தொடர்பில் இருக்கும் பகுதி) மாட்டு இதயத்
தசையினாலும் மறுபக்கம் (இரத்தத்தை உந்தித்தள்ளும் நுண்ணிய குழாய்கள்
மற்றும் ஹைட்ரோலிக் திரவங்களுடன் தொடர்பில் உள்ள பக்கம்) பொலியுரீத்தேன்
எனும் வேதியியல் பொருளாலும் ஆனது. செயற்கை இதயத்தினுள்ளே
பொருத்தப்பட்டிருக்கும் மின்னணுவியல் கருவிகளும் மென்பொருளும் இரத்த
ஓட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துகின்றன. செயற்கை இதயத்தை இயக்கும்
மின்கலன்களை கையில் கட்டிக்கொள்ளக்கூடிய பட்டை அல்லது இதர வழிகளில் உடலுடன்
பொருத்திக்கொள்ளலாம்.
மேலும் இதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்குப்பயன்படுத்தப்படும்
செயற்கை வால்வுகளும் மாட்டு இதயத் தசையினால் ஆனவை என்கிறார் கார்மட்
நிறுவனத்தின் அறிவியல் இயக்குநர் மற்றும் துணை நிறுவனர் பேராசிரியர் அலைன்
கார்பென்ட்டியர். செயற்கை வால்வு மற்றும் புதிய செயற்கை இதயத்தில்
பயன்படுத்தப்படும் மாட்டு இதயத்தசைகளில் உள்ள கிருமிகள் மற்றும் தேவையற்ற
உயிரியல் மூலக்கூறுகளை நீக்க தசைகள் வேதியியல் திரவத்தால் சுத்தம்
செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. சுவாரசியமாக, இந்த செயற்கை இதயத்தின்
வடிவமைப்புகள் மற்றும் உருவாக்கம் இரண்டும் ஐரோப்பிய விண்வெளி பாதுகாப்பு
மற்றும் விண்வெளி நிறுவனத்தின் பரிசோதனை முறைகள் மூலம்
செம்மைப்படுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 2014 ஆம் ஆண்டின் இறுதியில் சந்தைப்படுத்தப்படும் என்று
எதிர்பார்க்கப்படும் இந்த செயற்கை இதயத்தின் விலை சுமார் 2 இலட்சம்
அமெரிக்க டொலர்களாக இருக்கக்கூடும் என்கிறார்கள். தற்போது மேலதிக விலங்கு
பரிசோதனைகளில் இருக்கும் இந்த செயற்கை இதயத்தின் தரம் மனித ஆய்வுகள் மூலம்
மிக விரைவில் நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment