Monday, December 2, 2013

போலிஸ் என பொய் சொல்லி இளம்பெண் சித்திரவதை!

காரைக்கால்:    போலிஸ் என பொய் கூறி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து சித்திரவதை செய்த மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க பொறுப்பாளர் உள்ளிட்ட 3 பேரை நகர காவல்துறையினர் கைது செய்தனர்.

காரைக்கால் அம்மன்கோயில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி (38). இவர் அதே பகுதியில் அரவணைப்பு இல்லம் நடத்தி வருகிறார். இவரது இல்லத்தில் தமிழகப்பகுதியான கொல்லுமாங்குடியைச் சேர்ந்த உறவுப்பெண் கவிதா (22) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவர் தங்கி படித்து வந்தார். சில நாட்களுக்கு முன், கவிதாவிற்கும்  சாந்திக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு, கவிதா அதே பகுதியில் வேறொரு வீட்டில் தங்கி வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 20ஆம் தேதி கவிதா காரைக்கால் பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த போது, காரைக்கால் ராஜாத்தி நகரைச் சேர்ந்த மீனாட்சி (32), அம்மன் கோயில்பத்தைச் சேர்ந்த ஸ்டெல்லா (32) ஆகிய இருவரும் சென்று, தங்களைக் காரைக்கால் நகர காவல் நிலைய போலீஸார் என அறிமுகம் செய்து கொண்டு ஏன் இங்கு தனியாக நிற்கிறாய்? என விசாரித்துள்ளனர். பின்னர், உன்னைச் சோதனை செய்யவேண்டும். எஸ்.ஐ முன்னிலையில் விசாரணை நடத்தவேண்டும் என கூறி, அம்மன் கோயில் பத்து கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.
தொடர்ந்து,  காரைக்கால் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் மதியழகன் (42) என்பவர், தன்னை நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் என அறிமுகம் செய்து கொண்டு, குறிப்பிட்ட வீட்டில் தங்க நகை காணாமல் போய்விட்டது. அந்த வீட்டில் நீதான் நகைகளை எடுத்ததாக எழுதி கேட்டுள்ளார். அதற்கு கவிதா மறுத்துள்ளார். பின்னர், மதியழகன், சாந்தி, ஸ்டெல்லா, மீனாட்சி ஆகிய நான்கு பேரும் சேர்ந்து கவிதாவை ஆபாசமாக படம் எடுத்து, அடித்து உடைத்து சித்திரவதை செய்து, இதை யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளனர்.
நேற்று முன்தினம் கவிதா அந்த வீட்டிலிருந்து தப்பி, காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த காவலர், நான்கு பேரையும் கைது செய்து மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். நீதிபதி ஜெயந்தி 4 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment